(பாகம் 2)
இதுவரை நான் வாசித்த பெண் ஆளுமைகளின் கதைகளில் என்னை மிகவும் ஈர்த்தது, ஆச்சரியப்பட வைத்தது ‘வு செசான்’ (Wu Zetian) என்ற சீனப்பேரரசியின் கதை. இன்றைய சமுதாயத்திற்கும் கச்சிதமாகப் பொருந்துவது. ஒரு சாதாரண பெண் சமுதாயத்தின் உயர்ந்த நிலைக்கு வர முயற்சிக்கும் போதும், வந்தபின்னும், வந்து இறந்தபின்னும் ஆணாதிக்க சமுதாயம் அவளை எப்படியெல்லாம் முடக்க முயற்சிக்கும் என்பது இந்த பேரரசியின் கதை. சமுதாயம் முதலில் எடுக்கும் ஆயுதம் அவள் தன் அழகையும், உடலையும் வைத்து முன்னேறினாள் என்பது. வு செசானுக்கும் அது, பெரும்பாலும் அதுதான் நடந்தது. அந்த பெண் அதை எப்படித் தன் வாளாலும், திறமையாலும் எதிர் கொண்டாள் என்பதும் இதிலுள்ள கதை. இதில் மதங்களும், மரபுகளும் என்ன பங்களிப்பைக் கொடுத்தன என்பதும் இதிலுள்ள கதை. இன்றைய தேதியிலிருந்து பின்னோக்கி மூவாயிரம் ஆண்டுகள் செல்லும் சீன வரலாற்றில் அந்த நாட்டை ஆண்ட ஒரே பெண் வு செசான். இது சீனாவில் நடந்த கதை என்றாலும் உலகத்திற்கான கதை. கதைக்கு முன் அந்த காலகட்டதைப்பற்றிய ஒரு ட்ரெய்லர் அவசியம்.
இந்தியாவில் பௌத்தம் பரவ ஆரம்பித்த காலத்தில் வைதீகமும், சமணமும் பிரதானமாக இருந்த (பௌத்தத்துக்கு எதிராக இருந்த) மதங்கள். அதே போல சீனாவில் பௌத்தம் பரவ ஆரம்பித்த காலத்தில் கன்பூசியவாதமும், தாவோயிசமும் பிரதானமாக இருந்த (பௌத்தத்துக்கு எதிராக இருந்த) மதங்கள். இவற்றை மதங்கள் என்று எளிமைக்காக குறிப்பிடுகிறேன், தத்துவங்கள் என்று சொல்வது பொருத்தமாக இருந்தாலும். தத்துவங்களுக்கும் மதங்களுக்கும் உள்ள வேறுபாட்டை முடிவு செய்வது அதிகாரம். தத்துவங்களின் கைகளுக்கு அதிகாரம் வந்துவிட்டால் அவை மதங்களாகிவிடுகின்றன. அதிகாரத்தையிழந்த மதங்கள் தத்துவங்களாகிவிடுகின்றன. கடவுள் இல்லாத தத்துவங்கள் கூட மதங்களாகலாம், கடவுள் உள்ள மதங்கள் கூட வெறும் தத்துவங்களாகலாம். அதைத் தீர்மானிப்பது அரசியல், அதிகாரம். கிமு-கிபி முதல் நூற்றாண்டுகளில் சீனாவின் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தவை கன்பூசியவாதமும், தாவோயிசமும். இனி எல்லாவற்றையும் மதம் என்றே குறிப்பிடுகிறேன். குதர்க்கமடைய வேண்டாம்.
ஒரு மதம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குப் பரவுவதை சோசியல் மீடியா, தொலைத்தொடர்புகள் இல்லாத அந்த காலத்தில் தீர்மானித்தது அந்த இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள புவியியல். மலைகளும் கடல்களும் அரசியல் பாதுகாவலர்கள் மட்டுமல்ல, மதங்களின் பாதுகாவலர்களாகவும் இருந்தன. மலைகளையும், கடல்களையும் அரசியல் கடந்த போது மதங்களும் கூடவே கடந்தன. அசோகர் சீனாவுக்குத் தன் தூதர்களை அனுப்பியிருந்தாலும் பௌத்தம் சீனாவிற்குள் நுழைய முக்கிய காரணமாக இருந்தது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடைப்பட்ட நிலம் குஷானர்கள் கைவசம் சென்றது. அந்த குஷானர்கள் பௌத்தத்தை ஆதரித்தது.
இதில் கூகிள் மேப்பைத் திறந்து நிலப்பரப்பைப் புரிந்து கொள்வது அவசியம். இந்தியாவின் வடக்கே உள்ள நாடு சீனா. சீனாவின் தெற்கே உள்ள நாடு இந்தியா. ஆனால் இந்தியாவிலிருந்து வடக்காகவோ, சீனாவிலிருந்து தெற்காகவோ யாராவது வந்தால் இமய மலையில் முட்டிக்கொண்டுதான் நிற்க வேண்டும். நம் ஆட்கள் அந்த காலத்திலேயே புஷ்பக விமானமெல்லாம் வைத்திருந்தாலும் தெற்காகப் பறந்தார்களேயொழிய யாரும் இமய மலையைத் தாண்டி சீனாவுக்குள் பறக்கவில்லை. மனிதர்கள் கால்களால் தாண்ட முடியாத எல்லைகளை அவர்களின் பறக்கும் விமானங்களும் தாண்டமுடியவில்லை. நிலத்தின் வழியாக இந்தியாவிலிருந்து சீனாவையோ, சீனாவிலிருந்து இந்தியாவையோ அடைய மேற்கு திசையில் பயணிக்க வேண்டும். அதாவது இன்றைய நிலப்பரப்புப்படி வட இந்தியாவிலிருந்து மேற்காகக் கிளம்பினால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் என்று சென்று பாமீர் முடிச்சுகளைத் தாண்டி சீனாவிற்குள் நுழைய முடியும். அதே போல சீனாவிலிருந்து மேற்காகக் கிளம்பினால் பாமீர் முடிச்சு…பாகிஸ்தான் என்று இந்தியாவிற்குள் வரலாம். அதனால்தான் யுவான் சுவாங் தனது பயணப் புத்தகத்திற்கு ‘மேற்குப் பகுதிகள் பற்றிய மகா டாங் வம்சத்தின் ஆவணங்கள்’ என்று பெயர் வைத்திருந்தார். மேற்காகக் கிளம்பினால்தான் இந்தியா-சீனா-இந்தியா-சீனா என்று நிலவழிப்பாதையில் பயணிக்க முடியும். இந்தியாவிற்கு மேற்கே இருந்த நாடு சீனா, சீனாவிற்கு மேற்கே இருந்த நாடு இந்தியா. வடக்கே தெற்கே என்றால் முட்டுச் சந்து. போதிதர்மர் முதற்கொண்டு பல முதல் பேட்ச் பௌத்த மிஷனரிகள் சென்றது இந்த மேற்கு வழியில்தான்.
இந்த இரண்டு நாடுகளுக்கிடையேயான மேற்கு நிலப்பரப்பு ஒரே அரசின் கீழ் வந்ததும், அந்த அரசு பௌத்தத்தை ஆதரித்த அரசாகவும் ஆனது இந்திய எல்லைகளை பௌத்தம் கடந்து சீனா செல்ல பாதையமைத்துக் கொடுத்தது. (கிழக்கே கடல் வழியாக சீனாவிலிருந்து ஒரு நீண்ட வழி தமிழ்நாட்டுக்கு இருந்தது. அந்த வழி பௌத்தம் பரவத் தன் கதவுகளைத் திறந்தது நம் கதாநாயகி வு செசான் காலத்தில்தான். இது இரண்டாம் பேட்சுக்கான வழி.) இந்த மேற்கு நிலப்பரப்பை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்தது எங்கிருந்து வந்தார்கள் என்று இன்றும் குழப்பும் குஷானப் பேரரசு. இவர்களது சம காலத்திய எழுத்துப் பூர்வ ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த குஷான அரசர்களில் பிரபலமானவர் கனிஷ்கர். என் ஊரில் என் கூடப் படித்த ஒரு பையனுக்குக் கூட கனிஷ்கர் என்று பெயர் வைத்திருந்தார்கள். அந்த அளவு பிரபலம். ஆனால் அவர் சிலை கூட இந்தியாவின் பல புத்தர் சிலைகள் போல தலையில்லாமல்தான் மதுராவில் கிடைத்திருக்கிறது (இணைக்கப்பட்டிருக்கும் படம்). சில ஆண்டுகள் முன் தாலிபன்கள் உடைத்துப் போட்ட மாபெரும் புத்தர் சிலைகளை ஆப்கானிஸ்தானில் அமைத்தது இந்த குஷானர்கள்தான்.
இவர்கள் இந்த மேற்கு பிரதேசத்தில் பல பௌத்த மடங்களை நிறுவினார்கள். நிறுவ ஆதரவளித்தார்கள். அதில் உஸ்பெகிஸ்தானில் நிறுவப்பட்ட ஒரு பௌத்த மடத்தின் பெயர் ‘திரமிள விஹார்’ - அதாவது, தமிழ் விகாரை! தமிழக பௌத்தர்கள் அங்குவரை சென்று மடங்களை இரண்டாயிரம் ஆண்டுகள் முன் நிறுவியிருக்கிறார்கள். குஷானர்களால் சீனாவிற்குள் பௌத்தம் ஒரு வெளிநாட்டுத் தத்துவமாக காலடி எடுத்து வைத்தது. கன்பூசியவாதத்தையும், தாவோயிசத்தையும் எதிர்கொண்டது.
கன்பூசியவாதம் மற்றும் தாவோயிசத்தின் அரசியல் அதிகாரங்களால் ஒடுக்கப்பட்ட ஒரு பெண் இந்த வெளிநாட்டுத் தத்துவத்திற்கு அரசியல் அதிகார அங்கீகாரம் கொடுத்து தன் அரசியல் அதிகாரத்தை நிறுவியதும், அவளால் பௌத்த தத்துவம் ஒரு பெரும்பான்மை மதமாக சீனாவில் அவளுடன் சேர்ந்து விஸ்வரூபமெடுத்ததும் வு செசானின் கதை.அடுத்த பாகத்திலாவது இந்த கதைக்கு வர முயற்சிக்கலாம்.