(பாகம் 4)
“நீ எத்தனை முறை விழுந்தாய் என்பது முக்கியமல்ல. அத்தனை முறையும் எழுந்தவனல்லவா நீ”, என்பது போன்ற சுயமுன்னேற்றத் தத்துவங்களைச் சொல்லி மயக்கினாலும் அடிப்படையில் கன்பூசியவாதம் ஓர் ஆணாதிக்கத் தத்துவம்/மதம். ஆண்களுக்கு வந்தால் ரத்தம் பெண்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னி என்று சொல்லிய மதம். பல பழையகால இந்தியத் தத்துவங்கள் போல (இன்றும் பலர் தீவிரமாகக் கடைப்பிடிக்கும்) பெண்களை இரண்டாம் பாலினமாகக் கருதிய மதம். பெண்கள் கணவனுக்குப் பணி செய்வதே தலையாய கடமை, இளம்பெண்கள் திருமணமாகும் வரை உறவுகள் ஏதும் வைத்துக் கொள்ளக்கூடாது, கணவன் இறந்துவிட்டால் மறுமணம் செய்யக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் உள்ள மதம். பெண்களைத் தன்னருகே அண்டவிடாமல் வைத்திருந்ததைப் பெருமையாகக் கருதியவர் கன்பூசியஸ்.
அன்றைய கால சமுதாயத்தில் அப்படித்தானே இருந்தார்கள், அதெல்லாம் அந்தந்த காலத்தைப் பொறுத்தவரை சரிதானே என்று நாம் நியாயப்படுத்தலாம். திருவள்ளுவர் கொழுந்தனைத் தொழுதெழச் சொன்னால் அவர் காலத்தில் அது சரியாக இருந்திருக்கலாம் என்று விவாதம் செய்யலாம் (குறளின் அர்த்தம் வேறு என்றும் கலைஞர் போல விளக்கலாம்). இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் நம் பாட்டன்களெல்லாம் பதிமூன்று, பதினான்கு வயதுப் பிள்ளைகளைத் திருமணம் முடித்தார்கள், அதனால் அவர்களெல்லாம் போக்சோ கேசில் உள்ளே போக வேண்டியவர்களா என்று கேட்கலாம். போக வேண்டியவர்கள்தான். உண்மையில் இதெல்லாம் சப்பைக்கட்டு.
அந்த காலத்திலேயே பெண் சுதந்திரம் பற்றிப் பேசிய தத்துவங்கள் இருந்தன. முக்கியமாக, பௌத்தம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பேயே பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் (சில சமயங்களில் ஆணைவிட மேலானவர்கள்), பெண்களால் ஆண்கள் அடையும் அதே ஞானத்தை அடையமுடியும், பெண்கள் ஆண்கள் செய்யும் எல்லா வேலையையும் செய்யலாம் போன்ற விஷயங்களைப் போதித்தது. புத்தரே பேசியிருக்கிறார். பெண்கள் வியாபாரம் செய்தல், பயணம் செய்தல் போன்றவற்றை ஊக்குவித்தது. பௌத்தத்தைப் பின்பற்றிய மணிமேகலை போன்ற பெண்கள் புரட்சிப் பெண்களாக உருவெடுத்தார்கள். (பின்னாட்களில் அடிப்படைவாத பழக்கங்கள் பௌத்தத்திற்குள்ளும் நுழைந்துவிட்டன என்பது வேறு விஷயம்.) நான் சொல்ல வருவது என்னவென்றால் பெண் சுதந்திரம் பற்றிய கருத்துகள் நவீனமானவை அல்ல. அந்த காலத்திலேயே திடகாத்திரமாக இருந்திருக்கிறது. போதிக்கப்பட்டிருக்கிறது. அவற்றைக் கண்டுகொள்ளாமல், பின்பற்றாமல், பின்பற்றினாலும் காலப்போக்கில் கழற்றிவிட்டுவிட்டு மறுபடியும் பெண்களை அடுப்படிக்குள்ளும், சிலபல சமயங்களில் அடுப்புக்குள்ளும், சம்பளம் இல்லாமல் கணவன் பணிசெய்யவும் தள்ளிய நம் முன்னோர்கள் எல்லோரும் அடிப்படையில் குற்றவாளிகளே. பௌத்தம் எப்படி இந்தியாவிலிருந்து மறைந்தது என்பதற்கான பல காரணங்களில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கலாம். ஞானம் வேண்டுமா, பெண்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டுமா என்ற சாய்சில் நம்மாட்கள் தேர்ந்தெடுத்தது இரண்டாவது ஆப்ஷன். அதைத் தேர்ந்தெடுத்த காரணத்தால் அதையே ஞானம் என்றும் நம்ப, கற்பிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
பௌத்தம் அந்த காலத்திலேயே பெண் விடுதலை பற்றிப் பேசியதா, அதை ஆதரித்ததா என்று நீங்கள் சந்தேகப்பட்டால் சீனப் பேரரசி வு செசானின் கதையை வாசிக்க வேண்டும். அவள் வெளிநாட்டிலிருந்து (இந்தியாவிலிருந்து) வந்த பௌத்தத்தைத் தன் ஆயுதமாகப் பயன்படுத்தி உள்நாட்டிலிருந்த (சீனாவிலிருந்த) பெண்ணடிமையைப் போதித்த கன்பூசியவாதத்தை உடைத்தெறிந்தாள். அன்று அரசாங்க மதமாக இருந்த கன்பூசியவாதம் பெண்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதை சித்தாந்த ரீதியாக அனுமதிக்கவில்லை. அதனால் என்ன, சித்தாந்தத்தை மாற்றிவிட்டால் போயிற்று என்று பௌத்தத்தை அரசாங்க மதமாக்கிவிட்டாள். பௌத்தத்தின் பெயரில் பெண்களையெல்லாம் அரசதிகார பொறுப்புகளுக்குக் கொண்டுவந்தாள். பெண்களைக் கொண்ட போர்ப்படைகளை உருவாக்கினாள். சீனாவில் அகழ்வாராய்ச்சிகளில் குதிரை மேல் பெண் படைகள் சவாரி செய்யும் வு செசான் கால சிற்பங்கள் ஏகப்பட்டவை கிடைத்திருக்கின்றன.
பெண்விடுதலை என்ற அடிப்படையில் பௌத்தம் சீனாவின் அதிகாரத்தைத் தன் கையிலெடுத்தது மிகவும் ஆச்சரியமான உண்மை!