(பாகம் 1)
மறுபடியும் முந்தைய பதிவுகளின் ஒரு ஸ்பின்-ஆஃப். பண்டைய வட இந்தியாவில் சிறிய அளவில் பரவியிருந்த பௌத்த மதத்தை அரசாங்க மதமாக மாற்றி அதை இந்தியா முழுவதும் எடுத்துச் சென்றது யார் என்று கேட்டால் பேரரசர் அசோகர் என்று பள்ளி படித்த யாரும் உடனே பதிலளித்துவிடலாம். பொதுவாக ஒரு மதத்தைக் குறுகிய காலத்தில் இந்தியா போன்று பரந்து விரிந்த பல கலாச்சாரங்கள் கொண்ட ஒரு நாடெங்கும் கொண்டு செல்ல வேண்டுமென்றால் அது அசோகர் போன்ற சக்கரவர்த்திகளால் மட்டுமே முடியும் (‘சக்கரவர்த்தி’ என்ற பெயரை முதலில் வைத்துக் கொண்டது அசோகர்தான்). அசோகர் ஏற்கனவே அகண்ட இந்தியா முழுவதையும் - தமிழ்நாடு, கேரளா தவிர்த்து - ஒரே குடையின் கீழ் கொண்டுவந்துவிட்டார். அதனால் அவர் பௌத்தத்தை முழுமையாகத் தழுவியபோது அதை இந்தியா முழுவதும் கொண்டு சென்றது ஓரளவு எளிதாகிவிட்டது. இதே போல ஐரோப்பாவிலும் சிதறிக்கிடந்த ரோமானியப் பேரரசை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்த பேரரசர் கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவத்தைத் தழுவிய போது அதை ஐரோப்பா முழுவதும் கொண்டு சென்றதும் எளிதானது. சிற்றரசர்கள் அங்கங்கே ஆதரித்து நன்கொடை எழுதிக் கொடுத்து இது போன்ற மதங்களைக் குறுகிய காலத்தில் மக்களிடையே கொண்டு சென்று பெரும்பான்மை மதமாக்க முடியாது. அதற்கு பல நூறு ஆண்டுகள் பிடிக்கும். அதற்குள் மதமும் சிதறிவிடும். மக்களும் சிதறிவிடுவார்கள். வேறு படம் பார்க்கப் போய்விடுவார்கள்.பண்டைய உலகிலும் சரி, இன்றைய உலகிலும் சரி இந்தியாவிற்கு, ஐரோப்பாவிற்கு இணையான மிகப்பெரிய நாடு சீனா. இந்தியா போல அங்கேயும் வலிமையான பேரரசுகள் இருந்தன. அப்போதே சீனப் பெருஞ்சுவரெல்லாம் கட்டிவிட்டார்கள்.
இந்தியா அசோகர் காலத்தில் பௌத்த நாடாக மாறியது போல இத்தகைய வலிமையான சீனா கிபி ஏழாம் நூற்றாண்டில் ஒரு குறுகிய காலத்தில் மொத்தமாக பௌத்த நாடாக மாறியது. இந்தியாவில் அசோகருக்குப் பிறகு புத்த மதம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து, அழிக்கப்பட்டு ஏறக்குறைய அடுத்த ஆயிரம் ஆண்டு காலத்தில் சிறுபான்மை மதமாகிவிட்டது. சீனாவில் பௌத்தம் தழைத்தோங்கிய அதே கிபி ஏழாம் நூற்றாண்டிலேயே, அதாவது யுவான் சுவாங் இந்தியா வந்த காலத்திலேயே பல பௌத்த கோவில்கள் இந்து கோவில்களாக வட இந்தியாவில் மாற்றமடைந்துவிட்டதாகச் சொல்கிறார். புத்த கயாவிலேயே அசோகர் கட்டிய பௌத்த கோவிலில் உள்ள மணியை தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டு சிவலிங்கமென வழிபட ஆரம்பித்திருந்தனர். போதி மரம் வெட்டப்பட்டுவிட்டது.ஆனால் சீனாவில் பௌத்த மதம் இன்றும் வாழ்கிறது. இன்றைய உலகில் அதிக பௌத்தர்கள் வாழும் நாடு சீனா. ஏறக்குறைய இருபத்தைந்து கோடி பேர். இன்று இந்தியாவின் பௌத்தத் தலங்களுக்கு டூரிஸ்டுகளாக வருபவர்களில் பெரும்பான்மையானோர் சீனர்களும், தைவானியர்களும். அசோகருக்கு இணையாக யாரோ ஒருவர் சீனாவில் அடித்தளம் போட்டிருந்தால்தான் அது இவ்வளவு தூரம் அங்கு வேரூன்றியிருக்க முடியும். யாரோ ஒரு சக்கரவர்த்தியால்தான் இதைச் சாத்தியமாக்கியிருக்க முடியும். நிற்க. அது ஒரு சீனச் சக்கரவர்த்திதான். பெண் சக்கரவர்த்தி. பேரரசி.யுவான் சுவாங் தனது பதினாறு ஆண்டு இந்தியப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு ஒரு ஹீரோவாக சீனா திரும்பிய அதே காலகட்டத்தில் அன்றிருந்த சீனப் பேரரசரின் அந்தப்புரத்தில் பதிமூன்று வயதில் ஒரு கடைநிலை அந்தப்புர அழகியாக தள்ளப்பட்ட பெண். ஏனென்றால் அவளது தந்தை அந்த பெண்ணின் பத்து வயதிலேயே இறந்துவிட்டார். வயதான பேரரசருக்கு உடைமாற்றி விடுவது, துணி துவைப்பது, அவர் ஆசைப்பட்டால் அதற்கு இணங்குவது போன்ற வேலைகளுக்காக அனுப்பட்ட பெண். இந்த பெண் பின் நாட்களில் விஸ்ரூபமெடுத்து சக்கரவர்த்தியாக மாறிய கதை கிளியோபட்ரா, கேத்தரின் கதைகளைவிடவெல்லாம் சுவாரசியமானது. பயங்கரமானது. ஆச்சரியமானது என்னவென்றால் அவளுக்கு உதவியவர்கள் எல்லாம் பண்டைய இந்தியாவிலிருந்து (தமிழ்நாட்டிலிருந்தும்) சீனா சென்றவர்கள். அன்றைய சீன அரசாங்க அதிகாரி ஒருவர் இந்த பெண்ணைப் பற்றி எழுதியது: “இவளது இதயம் ஒரு பாம்பு. இவளது குணம் ஓர் ஓநாய். கடவுளாலும், மனிதர்களாலும் வெறுக்கப்பட வேண்டியவள். பேரரசர் இறந்து அவரது கல்லறையின் ஈரம் காய்வதற்குள்ளேயே அவரது மகனைச் சிறையில் அடைத்துவிட்டாள்.”அவளால் சிறையில் வைக்கப்பட்டதாக மேலே சொல்லப்பட்டிருக்கும் அந்த இளவரசன் பிறந்த போது அவனுக்குப் பெயர் வைத்தது யுவான் சுவாங்!யாரும் வாசித்தாலும் வாசிக்காவிட்டாலும் மீதி நாளை!