16 Sep
16Sep

(பாகம் 3)

அந்த காலத்தில் ஐரோப்பியர்களெல்லாம் இந்தியாவுக்கு வர வழிகண்டுபிடிப்பதைதான் வாழ்க்கை லட்சியமாகக் கொண்டிருந்தார்கள், செல்வச் செழிப்புடன் விளங்கிய, அறிவுக்கருவூலமாக திகழ்ந்த இந்தியாவுடன் வியாபாரம் செய்ய, அதைக் கைப்பற்ற விரும்பினார்கள், அலெக்ஸான்டர் போன்றவர்கள் அதற்காகப் படையெடுத்தார்கள், பிற்காலங்களில் காலனிப்படுத்தினார்கள் என்றெல்லாம் வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் படித்திருப்போம். அதெல்லாம் ஒரு சைடில் இருந்தாலும் பக்கத்திலேயே இருந்த வலிமைமிக்க சீனப் பேரரசு இந்தியாவின் மீது படையெடுப்பதிலோ, அறிவுச் செல்வங்களை தூக்கிச் செல்வதிலோ, பறந்து செல்வதற்கான மந்திரங்கள் எழுதிய ஓலைச்சுவடிகளை அழிப்பதிலோ அக்கறை காட்டவில்லை. அவர்களது பழைய கால குறிப்புகளின்படி இந்தியாவை ஒரு பெரிய பொருட்டாகவே மதித்ததற்கான அறிகுறியே இல்லை. அவர்கள் அன்றைய இந்திய நிலப்பரப்புக்கு வைத்திருந்த புனைப்பெயர்களெல்லாம் காட்டுமிராண்டிகள் பிரதேசம், பிராமின்களின் பிரதேசம் போன்றவை. (இதை நாம் நமது வாழ்க்கையிலும் கவனித்திருப்போம். வெளியூர்க்காரர்களெல்லாம் நம்மை மதித்து நம் வீட்டுக்கு வருவார்கள். ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் இவனைத் தெரியாதா என்றுதான் இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள்தான் நம்மை அருகிலிருந்தே பார்ப்பவர்கள்.)

இதற்கு ஒரு காரணம் சீனர்கள் தங்களை மிஞ்சி யாரும் இல்லை என்று நினைத்தது. நாடும் ஓரளவு தன்னிறைவுடன் இருந்தது. கன்பூசியவாதம் ஒரே நாடு ஒரே மதம் போல மொத்த சீன நிலப்பரப்பை ஒருங்கிணைத்திருந்தது. அதைப் பிடிக்காதவர்களுக்கு மாற்றாக இருந்தது தாவோயிசம். சீனப்பெருஞ்சுவரெல்லாம் கட்டி, வில்-அம்புகளின் நுணுக்கங்கள் தெரிந்து, கட்டக்கலை தெரிந்து, திசைகாட்டி கண்டுபிடித்து, உடலில் பஞ்சர் ஒட்டத் தெரிந்த அவர்களுக்கு இந்தியா பெரிதாகத் தேவைப்படவில்லை. டீசன்டாக ஒரு வியாபாரப் பாதை மட்டும் இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அன்றைய ஐரோப்பியர்களுக்கு இந்தியாவின் மீதிருந்த கவர்ச்சி அவர்களிடமில்லை. 

ஆனால், இது மாறியது. இந்தியாவின் மீதான அறிவுக்கவர்ச்சியை சீனர்களுக்கு உருவாக்கியது பௌத்தம். இந்தியர்களிடம் ஒரு புதிய சிந்தனை மரபு புத்தர் என்பவர் மூலம் உருவாகியிருக்கிறது என்பதையும், அது என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமும் ஏற்பட்டது. கிபி ஒன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பித்திருக்கிறது. அதன் பிறகு இந்த பௌத்த பரப்புரையாளர்களின் மந்திர, தந்திர சக்திகளும் சேர்ந்து கொண்டது. போதி தர்மர் அடித்து தூள் கிளப்பியதையெல்லாம் கிராபிக்ஸ் போட்டு முருகதாஸ் காண்பித்துவிட்டார். (ஆனால் போதிதர்மரைவிட அதிக இம்பாக்ட் சீனாவில் கொடுத்தது தமிழ்நாட்டிலிருந்து சென்ற வஜ்ரபோதி எனும் பௌத்த ஞானி. நம் கதாநாயகி வு செசானின் வாரிசைச் சந்தித்து நம் ஊரிலுள்ள பேசும் கிளியைப் பரிசளித்து முதல் சந்திப்பிலேயே ஆச்சரியப்படுத்திவிட்டார்.)

யுவான் சுவாங்கின் பயணப் புத்தகத்தின் பெயர், ‘மேற்குப் பகுதிகள் பற்றிய மகா டாங் வம்சத்தின் ஆவணங்கள்’. இதில் இந்தியா ஏன் ‘மேற்குப்பகுதிகள்’ என்று குறிப்பிடப்பட்டது என்பதை நேற்று விளக்கிவிட்டேன். புத்தகத்தின் பெயரில் அடுத்துவரும் ‘டாங் வம்சம்’ என்பது வடக்கு தெற்காக பிரிந்து கிடந்த சீனாவை கிபி ஏழாம் நூற்றாண்டில் ஒரே பேரரசாக ஆட்சி செய்த வம்சம். 

அந்த டாங் வம்சத்தின் இரண்டாவது பேரரசர் பெயர் டாய்ஜோங். சீனாவைப் பற்றி வாசித்தால் ஙோய், ஞொய் என்றுதான் நாக்கை மூக்குக்குள் சுழட்ட வேண்டும். வேறு வழியில்லை. யுவான் சுவாங் சீனாவிலிருந்து புறப்பட்ட போது அவருக்கு இமிக்ரேஷன் அனுமதிகூட அன்றைய சீன அரசு கொடுக்கவில்லை. ஓடி ஒளிந்து அரசாங்கத்துக்குத் தெரியாமல்தான் இந்தியா வந்து சேர்ந்தார். அதே யுவான் சுவாங் சீனா திரும்ப வந்தபோது அவரை வரவேற்று இந்தியாவில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டு அவருக்கு தனி மடம் கொடுத்து நாளந்தாவிலிருந்து அவர் பிரதியெடுத்துக் கொண்டுவந்திருந்த பௌத்த நூல்களையெல்லாம் சீன மொழியில் பெயர்க்க வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அதற்கு காரணம் டாய்ஜோங். ஆனால் பாவம், இந்த டாய்ஜோங் கொஞ்ச நாளிலேயே உடல் நலம் குன்றி கிடையில் விழுந்துவிட்டார். அவரைக் காப்பாற்ற சீன மருத்துவம் ஏதும் பலிக்கவில்லை. அப்போது இந்தியாவில் இருநூறு வயதாகியும் உயிர்வாழும் ஒரு ‘பிராமின் மருத்துவர்’ (இது ஏன் அவரது வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது என்றால் அவர் பௌத்தர் இல்லை என்று தெரிவிப்பதற்காக இருக்கலாம்; இரண்டாவது, இந்தியாவை பிராமின் தேசம் என்றும் சீனர்கள் அழைத்துக் கொண்டிருந்தார்கள் என்று மேலே சொன்னது நினைவிலிருக்கலாம்.) என்று கன்னோசியிலிருந்து ஒருவரைக் கூட்டிவந்தார்கள். அவருக்கு பாதரசத்தை வைத்து உயிரைக் காப்பாற்றும் சக்தி படைத்த ஒரு கஷாயத்தைத் தயாரிக்கும் வித்தை தெரிந்திருந்ததாகவும் அவர் பேரரசர் டாய்ஜோங்கைக் காப்பாற்றுவார் என்றும் சொல்லி மருத்துவம் அளிக்க வைத்தார்கள். அவர் அளித்த மருத்துவத்தில் இன்னும் சில ஆண்டுகள் உயிர் வாழவேண்டிய அந்த பேரரசர் ஒரே மாதத்தில் மண்டையைப் போட்டுவிட்டார்.

இப்படி செத்துப் போன டாய்ஜோங் என்ற அந்த பேரரசரின் அந்தப்புரத்தில் இருந்த பெண்தான் பின்னால் சீனப் பேரரசியாகப் போகும் வு செசான்! டாய்ஜோங்கின் ஆதரவை நம்பி மடத்திலிருந்த யுவான் சுவாங்குக்கும், அந்தப்புரத்திலிருந்த வு செசானுக்கும் அவரது மரணம் பேரிடியாக வந்து விழுந்தது.

தினமும் இந்த கதையை முடித்துவிட வேண்டுமென்றுதான் எழுதுகிறேன்.

Comments
* The email will not be published on the website.