16 Sep
16Sep

 (ஒரு கிளைக்கதை)

வரலாற்றை எப்படி எளிதாகத் திரித்துவிடலாம் என்று ஓர் எளிய கண்கூடான உதாரணம். இதற்கு முந்தைய பதிவொன்றில் சீனாவின் டாங் வம்சத்தின் இரண்டாவது பேரரசரான டாய்ஜோங்கை இந்தியாவிலிருந்து சென்ற வைத்தியர் ஒருவர் அவரைக் காப்பாற்றுகிறேன் என்று அவர் அளித்த பாதரச கஷாயத்தில் இன்னும் சில ஆண்டுகள் உயிர் வாழவேண்டிய அந்த பேரரசர் ஒரே மாதத்தில் மண்டையைப் போட்டுவிட்டார் என்று எழுதியிருந்தேன். அந்தகாலங்களில் இது ஒரு சாதாரண விஷயம்தான். வியாதிக்கு மருந்து சாப்பிடப் போய் அந்த மருந்தாலேயே மண்டையைப் போட்ட மன்னர்களின் ஒரு லிஸ்டே உள்ளது. டாய்ஜோங் இறந்த கதை வில்லியம் டேல்ரிம்பிளின் பொற்பாதை புத்தகத்திலிருந்து எடுத்தது (“An Indian Brahmin doctor newly arrived from Kannauj with a returning Chinese embassy also attended upon the Emperor; but despite his claims to be 200 years old and to know the secret of herbal elixirs of longevity, his mercury based concoctions only seemed to hasten Taizong’s demise”). வில்லியம் டேல்ரிம்பிள் போகிற போக்கில் எதையாவது எழுதுபவரல்ல. இந்த ஒரு கூற்றுக்கு இரண்டு ஆராய்ச்சிப் புத்தகங்களைப் பக்கம் எண் முதற்கொண்டு பின்குறிப்புகளில் ஆதாரமாகக் கொடுக்கிறார். 

நான் வில்லியம் டேல்ரிம்பிளின் புத்தகத்தை வைத்து எழுதிவருவதை பத்துபேர் வாசித்தாலும் அவரது பொற்பாதை புத்தகத்தில் வரும் வு செசானின் வரலாறு இன்று பலராலும் ரசிக்கப்பட்டு பேச்சுப் பொருளாகியிருக்கிறது. இந்தியா டுடே பத்திரிகையில் இந்த புத்தகத்திலுள்ள வு செசானின் வரலாற்றைச் சுருக்கி ஒரு கட்டுரையாக மூன்றுநாட்கள் முன்பு வெளியிட்டிருக்கிறார்கள். வில்லியம் டேர்லிம்பிள் அவரது புத்தகத்தில் வு செசான் பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்பதுதான் அந்த கட்டுரை. வெறும் புத்தகத் திறனாய்வுக் கட்டுரைதான், ஆராய்ச்சிக் கட்டுரையெல்லாம் அல்ல. அந்த கட்டுரையில் வு செசாங்கை அந்தப்புரத்தில் வைத்திருந்த பேரரசர் டாய்ஜோங் இறந்த கதையைப் பற்றிச் சொல்லும் போது, “இந்தியாவிலிருந்து சென்ற பிராமின் எவ்வளவோ முயற்சித்தும் டாய்ஜோங் அவரது தீராத வியாதியால் இறந்துவிட்டார்”, என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார்கள் (“Also treating emperor Taizong was a Brahmin from Kannauj. Despite the expert's best efforts, the emperor died after a chronic illness”). ஒரு வரலாற்றாசிரியர் ஐந்து வருடங்கள் ஆராய்ச்சி செய்து, பயணம் செய்து வரிக்கு வரி ஆதாரங்கள் கொடுத்து புத்தகம் எழுதினால் அந்த புத்தகத்தையே வைத்துக்கொண்டு அவர் சொன்னதாக அவர் சொன்னதையே மாற்றிவிட்டார்கள். இனிமேல் இந்த இந்தியா டுடே கட்டுரையை ஆதாரமாக வைத்து நாலு பேர் யூட்யூபில் அந்த வைத்தியரின் பெருமையைப் பேசுவார்கள். இதுதான் நாம் வரலாறு பேசும் லட்சணம். கோட்சே சுட்டுப் பயிற்சி செய்யும் போது காந்தி குறுக்கே வந்துவிட்டார் என்பது போன்ற வரலாறு. (அவலம் என்னவென்றால் வில்லியம் டேல்ரிம்பிளே அந்த கட்டுரையை X-தளத்தில் பகிர்ந்து அவரது புத்தகத்தை வாங்கிப்படியுங்கள் என்று சொல்லும் நிலை.)


சீனப்பேரரசி வு செசானின் வரலாற்றுக்கும் வரலாற்றுத் திரிப்பிற்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது. கன்பூசியவாதத்தை, அடிப்படைவாதத்தை எதிர்த்து பரந்து விரிந்த சீன தேசத்தை ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆண்டு 81-ஆம் வயதில் இயற்கை எந்திய அவரது வரலாற்றை அவர் இறந்தவுடன் அழித்து மாற்றி எழுதிவிட்டார்கள் கன்பூசியவாதிகள். அவரை ஒரு இரத்த வெறி, காம வெறிபிடித்த பெண் என்று எழுதிவிட்டார்கள். இந்த காரணத்தால்தான் உண்மையில் வு செசான் யார் என்பது போன்ற ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

Comments
* The email will not be published on the website.