16 Sep
16Sep

 (பாகம் 5, கடைசி)

இந்த மிக நீண்ட கடைசிப் பதிவை வாசித்தால் வு செசானுக்கு இதுவரை ஏன் இவ்வளவு பில்ட்-அப் கொடுத்தேன் என்று ஓரளவு தெரியும். இது மாயாஜாலக் கதையோ, புராணக்கதையோ அல்ல.

வு செசான் அவள் பெயர் என்றாலும் குடும்பத்தில் அவளை ‘மலர் மகள்’ என்று அழைத்தார்கள். Flower Girl. அவளது தந்தை இறந்ததும் அவளது அழகு அவளை ஓர் ஆதரவற்ற பெண்ணாக பதின்மூன்று வயதில் சீனப் பேரரசர் டாய்ஜோங்கின் கடைநிலை அந்தப்புரப் பெண்ணாக வந்து சேரவைக்கிறது. அந்தகால சீன அந்தப்புரங்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் இருப்பார்கள். டாய்ஜோங் தன் வாழ்க்கையையெல்லாம் போரில் கழித்துவிட்டு அவரது கடைசிகாலத்தில் இந்தியாவிலிருந்து திரும்பி வந்திருந்த யுவான் சுவாங்குடன் ஆன்மீகம், தத்துவம் என்று பேசி நேரம் செலவழித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அந்தப்புரத்தில் இருந்த வு செசானுக்கும் யுவான் சுவாங்கின் அறிமுகம் கிடைக்கிறது. 

இந்தியாவிலிருந்து வந்த ஒரு வைத்தியர் பார்த்த மருத்துவத்தில் பேரரசர் போய்ச்சேர்ந்துவிடுகிறார். அந்த மரணம் யுவான் சுவாங்குக்கும், வு செசானுக்கும் வெவ்வேறு காரணங்களுக்காகப் பிரச்சனையாகிறது. இதெல்லாம் நடந்தது கிபி ஏழாம் நூற்றாண்டில்.

யுவான் சுவாங்கின் பிரச்சனை | அன்றைய சீனாவில் அரசாங்க அதிகாரம் இருந்தது கன்பூசியவாதிகளிடம். இரண்டாவது அதிகார நிலையில் இருந்தது தாவோயிசம். மூன்றாவது நிலையில் இருந்ததுதான் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த பௌத்தம். யுவான் சுவாங் நாளந்தாவிலிருந்து கொண்டுவந்திருந்த அறிவுப் பொக்கிஷங்களையெல்லாம் மன்னருக்கு அறிமுகப்படுத்தி, அவருக்கு பௌத்தத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தி இரண்டாம் நிலையிலிருந்த தாவோயிசத்தைக் கழற்றிவிட்டுவிட்டு அதற்கு மாற்றாக பௌத்தத்தைக் கொண்டுவர அனுமதி வாங்கிவைத்திருந்தார். அது இப்போது கேள்விக்குறியாகிவிட்டது.

டாய்ஜோங்குக்குப் பிறகு சீனப்பேரரசராக முடிசூட்டிக் கொண்டது அவரது மகன் காவ்ஜோங். தன் தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்த ஒரு கோவிலுக்கு வருகிறான். அதுதான் வு செசானும் இருந்த கோவில். அங்கே அழுது கொண்டிருந்த இந்த மலர் மகளைப் பார்க்கிறான். இதில் ஒரு பின்கதை இருக்கிறது. அவனது தந்தை பேரரசர் டாய்ஜோங் உயிரோடு இருந்த சமயத்தில் அவன் அரண்மனையில் தங்கியிருந்தபோது அந்தப்புறத்திலிருந்த வு செசானை ஒருமுறை சந்தித்திருந்திருக்கிறான். இருவருக்கும் ஒரு குறுகிய காலக் காதல் மலர்ந்திருந்திருக்கிறது. இப்போது அவன் அவளை - வலுக்கட்டாயமாக சந்நியாசியாக்கப்பட்டிருக்கும் அவளை - மறுபடியும் சந்திக்கிறான். அவள் தன்னைக் காப்பாற்றிக் கூட்டிச் செல்லுமாறு ஓர் அழகிய கவிதையை அவனிடம் எழுதிக் கொடுத்துக் கெஞ்சுகிறாள். அவனும் கூட்டிச் சென்று மறுபடியும் அந்தப்புரத்தில் சேர்த்துவிடுகிறான். அன்று கடைநிலையில் இருந்த வு செசான் இப்போது அந்தப்புரத்தில் இரண்டாம் நிலைப் பெண். முதல் நிலையில் இருந்தது காவ்ஜோங் ஏற்கனவே திருமணம் முடித்திருந்த ஒரு பட்டத்து ராணி. காட்டிலிருந்த ஒரு புலியை அரண்மனைக்குள் அவிழ்த்து விட்டிருக்கிறார்கள் என்று அப்போது யாருக்கும் தெரியவில்லை.

பட்டத்து ராணியாக வேறு ஒரு பெண் இருந்தாலும் பேரரசர் காவ்ஜோங்கின் கட்டில் வு செசானுக்குப் போகிறது. இருவருக்கும் முதல் குழந்தை பிறக்கிறது. ஆண் குழந்தை. அந்த குழந்தைக்கு ‘புத்தரின் ஒளியின் இளவரசன்’ என்று சீன மொழியில் பெயர் வைக்கிறார் யுவான் சுவாங். அந்த பையனுக்கு யுவான் சுவாங் குருவாக இருந்து வளர்க்கிறார்.

இரண்டாம் நிலையில் இருந்த வு செசான் இப்போது முதல் நிலைக்கு வர முடிவெடுக்கிறாள். பட்டத்து ராணியை டார்கெட் செய்கிறாள். அந்த பட்டத்து ராணிக்கு குழந்தைகள் கிடையாது.  வு செசானுக்கு அடுத்ததாக ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அந்த பெண் குழந்தை கொல்லப்படுகிறது. பழி குழந்தைப் பேறு இல்லாத பட்டத்து ராணியின் மேல் போகிறது. பட்டத்து ராணி கைது செய்யப்பட்டு சிறைக்குப் போகிறார். கன்பூசியவாதிகள் இவள் அரச குடும்பப் பெண் கிடையாது, முன்னாள் அரசரின் அந்தப்புரத்திலும் இருந்திருக்கிறாள், அவரது மகனின் அந்தப்புரத்திலும் இருக்கிறாள், இது தகாத உறவு என்றெல்லாம் தடங்கல்கள் கொண்டுவந்தாலும்… வு செசான் பட்டத்து ராணியாகிறாள். பட்டத்து ராணியானதும் இந்த கன்பூசியவாதிகளை ஒருவழி செய்துவிட முடிவெடுக்கிறாள். பௌத்தத்தைக் கையிலெடுக்க ஆரம்பிக்கிறாள். 

தான் பட்டத்து ராணியானதைக் கொண்டாடும் விதமாக ஐயாயிரம் பௌத்த சந்நியாசிகளை வரவழைத்து விருந்து கொடுக்கிறாள். யுவான் சுவாங் மனம் நெகிழ்ந்து இவளை பௌத்தத்தின் பாதுகாவலராகப் பிரகடனப்படுத்துகிறார். (வயதான யுவான் சுவாங் அந்த சமயத்தில் அவரது பயணங்களாலும், அனுபவங்களாலும் மதங்களைத்தாண்டி மக்களால் மிகவும் மரியாதைக்குரியவராக நேசிக்கப்பட்டவர்.) அவள் பட்டத்து ராணியானதைக் குறிக்கும் வகையில் யுவான் சுவாங்கின் வற்புறுத்துதலின் பேரில் அந்த பேரரசரால் ஒரு கல்தூண் சீனாவில் நிறுவப்படுகிறது. அதைப் பார்வையிட பத்து லட்சம் பேர் வருகிறார்கள். மக்கள் மத்தியில் பிரபலமாகிறாள்.

இது ஒருபக்கம் இருந்தாலும் சிறையில் இருக்கும் பழைய பட்டத்து ராணியை விட்டுவைத்தால் இன்னும் ஆபத்து என்று கருதுகிறாள் வு செசான். அந்த பழைய ராணி மேல் சதித்திட்ட பழிகள் போடப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அந்த பழைய ராணியுடன் அவளுக்கு உதவிய இன்னோர் அந்தப்புரப் பெண்ணும் கொல்லப்படுகிறாள். அவள் சாவதற்கு முன் மறுபிறவியில் தான் பூனையாகப் பிறந்து, வு செசான் எலியாகப் பிறந்து அவளைக் கொல்லப் போவதாகச் சாபமிடுகிறாள். இதைக் கேட்ட வு செசான் இனிமேல் எந்த பூனையும் அரண்மனைப் பக்கம் வரக்கூடாது என்று தடைவிதித்துவிடுகிறாள்! அந்த பழைய பட்டத்து ராணியும், உதவிய பெண்ணும் மிகக் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். இவர்கள் கொல்லப்பட்ட விதம் பேரரசரான காவ்ஜோங்குக்கே பீதியைக் கிளப்புகிறது. செத்துப் போன முதல் மனைவிக்காக தனிமையில் அழுகிறார்.

அடுத்து வு செசானின் கடைக்கண் பார்வைபட்டது அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த அமைச்சர்கள். ஒவ்வொரு அமைச்சராக மொத்தம் நாற்பத்து ஆறு பேர் தற்கொலை செய்தோ, கொல்லப்பட்டோ காலியாகிறார்கள். மீதி பலபேர் நாடுகடத்தப்படுகிறார்கள். இந்த களையெடுத்தல் இருபது ஆண்டுகள் தொடர்கிறது. எண்பது சதவீத அமைச்சர்கள், அதிகாரிகள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள். அடுத்து யார் பாக்கி? அவளது கணவர் பேரரசர் காவ்ஜோங். அவருக்குப் பக்கவாதம் வந்துவிடுகிறது. இப்போது வு செசான் நேரடியாக அவருக்கு சப்ஸ்டிடியூட்டாக ஆட்சி செய்ய ஆரம்பிக்கிறாள். அசோகருக்காக ஒரு சிலையை சீனாவில் அமைக்கிறாள். எழுநூறுக்கும் மேற்பட்ட பௌத்த மடங்களை நாடெங்கும் நிறுவுகிறாள். எல்லாம் மிகவும் பணச்செலவுடன் நிறுவப்பட்டவை. அது மட்டுமல்லாமல் அன்றைய சீனாவின் பொருளாதாரத்தை வளர்த்த எண்ணெய் ஆலைகள், பேப்பர் தொழிற்சாலைகள், அடகுத் தொழில்கள் எல்லாவற்றையும் இந்த பௌத்த மடங்களின் கீழ் கொண்டுவருகிறாள்.


யுவான் சுவாங் கனவுப்படி தாவோயிசத்தை இரண்டாம் நிலையிலிருந்து அகற்றி பௌத்தத்தை இரண்டாம் அதிகார நிலைக்குக் கொண்டுவருகிறாள். ஆனால் அதிலும் வு செசானின் ‘டச்’ உண்டு. சீனாவிலுள்ள லாங்மென் காம்ப்ளெக்ஸ் என்று சொல்லப்படும் இடத்தில் ஒரு புத்தர் சிலையில் நிறுவுகிறேன் என்று புத்தர் முகத்துக்குப் பதிலாக தன் முகத்தை வைத்து சிலையை நிறுவிவிட்டாள். அந்த சிலை இன்று வரை உயர்ந்து நிற்கிறது (இணைக்கப்பட்டிருக்கிறது). வு செசானால் பௌத்தம் வளர்ந்ததா, பௌத்தத்தால் வு செசான் வளர்ந்தாரா என்பது ஒரு புதிரானது. தானே புத்தராக உருவெடுத்துக் கொண்டிருக்கும் இந்த வு செசானை பார்த்துக் கொண்டிருந்த வயதாகிப் போன யுவான் சுவாங் வழுக்கி விழுந்து, கால் உடைந்து, படுத்த படுக்கையாகி இறந்துவிட்டார். ஏற்கனவே பக்கவாதத்தில் இருந்த பேரரசர் காவ்ஜோங் உடல்நிலையும் இப்போது மோசமாகி அவரும் இறந்துவிடுகிறார். 

அடுத்து என்ன, வு செசான் நாட்டின் பேரரசியாக முடிசூட்டிக்கொள்ள வேண்டியதுதானே என்று நீங்கள் நினைக்கலாம். அதுதான் இல்லை. இன்னும் முதல்நிலையில் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ மதமாக இருந்த கன்பூசியவாதம் பெண் ஒருத்தி பேரரசியாக அனுமதிக்கவில்லை. இரண்டாவதாக, இவள் டாங் வம்சத்தில் பிறத்த பெண் கிடையாது. அதனால் அவள் வேறுவழியில்லாமல் தன் முதல் மகனான, யுவான் சுவாங் பேர் வைத்த ‘புத்தரின் ஒளியின் இளவரசனை’ அடுத்த பேரரசனாக முடிசூட்டுகிறாள். அவனுக்கு அப்போது திருமணமும் ஆகியிருந்தது. அதனால் பட்டத்து ராணியாக அவன் மனைவியும் முடிசூட்டப்படுகிறாள். ஆனால் இரண்டு பேரும் இரண்டு மாதம்தான் வு செசான் முன்னால் தாக்குப்பிடித்தார்கள். இரண்டு பேரையும் ஆளத்தகுதில்லாதவர்கள் என்று நாடுகடத்திவிடுகிறாள். அவனுக்குப்பதிலாக வாய்பேச முடியாத தன் தம்பி என்று ஒருவனைக் கூட்டிவந்து முடிசூட்டுவிழாகூட நடத்தாமல் பேரரசனாக்குகிறாள். ஒரு டம்மியாக.

ஆனால் இந்த நாடகத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கன்பூசியவாதிகள் டம்மிகளல்ல. அதிகார வர்கத்தினர். வு செசானுக்கு எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள். நான் முதல் பாகத்தில் எழுதியிருந்த பாம்பு போன்றவள், நரி போன்றவள் என்பதெல்லாம் இந்த புரட்சியின் போது கன்பூசியவாதிகள் பிரச்சாரம் செய்தது. ஆனால் அவர்கள் புரட்சி மூன்று மாதம்தான் தாக்குப்பிடித்தது.  புரட்சி செய்த அத்தனை பேரையையும் மூன்று லட்சம் பேர் கொண்ட படையினரை வைத்து ஒரே நசுக்காக நசுக்கி சொர்கத்திலிருந்த கன்பூசியசைப் பார்க்க அனுப்பிவைத்துவிடுகிறாள். இப்போது அவள் பேரரசியாக முடிசூடிக் கொள்வதை எதிர்க்க ஆட்கள் இல்லை. சித்தாந்தவாதிகளை ஒடுக்கிவிட்டாலும் சித்தாந்தம் எப்போது வேண்டுமானாலும் வந்து காலைக்கவ்வும் என்று அவளுக்குத் தெரியும். எந்த பின்புலமும் இல்லாமல் வளர்ந்தது, அரச வம்சத்தில் பிறக்காதது எல்லாம் ஒரு பேரரசை ஆள சித்தாந்தரீதியாக எப்போதும் பிரச்சனைகள். ஒரு கணம் யோசித்துப் பார்த்தால் இதெல்லாம் அவள் கையில் இல்லாதவை. அவளது பிறப்பை, பின்புலத்தை அவள் தேர்ந்தெடுக்கவில்லை. நாம் எல்லோரையும் போல வாழ்க்கையைதான் தீர்மானிக்க முடியும், பிறப்பைத் தீர்மானிக்க முடியாது. நிற்க! வு செசான் அதையும் மாற்றிவிட முடிவு செய்துவிடுகிறாள்.

இங்கே அவள் நகர்த்திய அடுத்த காய்கள் நம்மை இன்னும் ஆச்சரியப்படுத்துபவை. எல்லோரும் மதங்களைப் பின்பற்றுவார்கள். இவள் ஒரு மதத்தையே தன்னைப் பின்பற்ற வைத்தாள். பௌத்தம் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு வந்தது. பௌத்த நூல்களெல்லாம் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு வந்தவை. அவளது காலத்தில் வந்து கொண்டிருந்தவை. யாராவது அந்த பௌத்த புனித நூல்களில் இவளைப் பற்றிச் சொல்லியிருப்பதாகக் (அதாவது, தீர்ககதரிசனம்) கண்டுபிடித்துச் சொன்னால் அவர்களுக்குப் பரிசுகள் கொடுப்பதாக அறிவித்தாள். அவ்வளவுதான். தினமும் ஒரு ஆள் வந்து அந்த நூலில் வு செசானைப் பற்றி இப்படி ஒரு தீர்க்கதரிசனம் இருக்கிறது, இந்த நூலில் இப்படி ஒரு தீர்க்கதரிசனம் இருக்கிறது என்று கொண்டுவந்து பரிசில் வாங்க வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டார்கள். இதில் ஒன்று வு செசானை ஆச்சரிப்படுத்தும் அளவு உண்மைக்கு நெருக்கமாக வந்தது. இந்தியாவிலிருந்து பத்து பௌத்த ஞானிகள் ‘மேக சூத்திரம்’ என்ற நூலைக் கொண்டுவந்தார்கள். அது புத்தராலேயே எழுதப்பட்டதாக நம்பப்படுவது. நம் செய்யுள்கள் போல அதற்கு எழுதிய ஒரு புதிய உரையின்படி ஒரு பெண் புத்தர் காலத்துக்கு எழுநூறு ஆண்டுகளுக்குப்பிறகு பிறப்பாள், அவள் பேரழகியாக இருப்பாள், ஒரு சக்கரவர்த்தியாக தர்மத்தின்படி உலகை ஆளுவாள் என்று அந்த மேக சூத்திரத்தில் இருந்தது. (இதில் சில பிழைகள் இருந்தாலும்) வு செசானுக்கு இது அப்படியே பொருந்திவிட்டது. அந்த இந்தியர்களுக்கு சீனாவின் பெரிய பதவிகளைக் கொடுத்தாள். ‘மேக சூத்திரம்’ பிரதியெடுக்கப்பட்டு சீன மக்களுக்கெல்லாம் வாசிக்க விநியோகிக்கப்பட்டது. இதற்கிடையே தான் பயலாஜிக்கலாகப் பிறக்கவில்லை, தன் தாய்க்கு கனவில் ஒரு டிராகன் வந்ததன் மூலம் அவர் கற்பமுற்றார் என்று தன் பிறப்பின் வரலாற்றையும் மாற்றிவிடுகிறாள்.

இப்போது எஞ்சியிருந்த ஒரே கடைசிக் கேள்வி அவள் டாங் அரச வம்சத்தவள் இல்லை என்பது. டாங் வம்சத்தில் பிறக்காத ஒரு பெண் எப்படி டாங் வம்ச பேரரசியாக ஆகமுடியும்? இந்த பிரச்சனையை அவள் முடித்துவைத்த விதம் யாருமே எதிர்பார்க்காத ஒன்று. டாங் வம்சம் என்று ஒன்று இருந்தால்தானே அந்த கேள்விவரும் என்று மொத்த டாங் வம்சத்தையே கலைத்துவிட்டு ‘சோ’ வம்சம் (Zhou Dynasty) என்று அவள் பெயரின் முதல் எழுத்தை வைத்து ஒரு புதிய வம்சத்தை நிறுவிவிட்டாள். அதன் பேரரசியாகத் தன்னை முடிசூட்டிக் கொண்டாள். அந்த வம்சத்தின் அதிகாரபூர்வமான மதம் பௌத்தம் என்று அறிவித்தாள். அது மட்டுமல்ல, இந்த மாற்றத்தை நிரந்தரமாக்க சீன நாட்காட்டியை மாற்றினாள், எழுத்துகளை மாற்றினாள். அரசின் அடிப்படையையே மாற்றிவிட்டாள்.

அவள் பேரரசியாக முடிசூட்டிக்கொண்டபோது தனக்கு வைத்துக்கொண்ட பெயர்தான் ‘சக்கரவர்த்தி பேரரசி தர்மத்தின் தலைவி’ (Chakravartin Empress Wu of the Zhou Dynasty, Divine Sovereign of the Golden Wheel of Law)! அடுத்த ஐந்து ஆண்டுகளில் புத்தரின் இரண்டாம் வருகை என நம்பப்படும் மைத்ரேயா தான்தான் என்றும் அறிவித்துவிட்டாள். அதுவும் ‘தன்னிகரற்ற மைத்ரேயா’ என்று (பின்னால் யாரும் வந்துவிடக்கூடாது என்று)! அப்படியே சைடில் பழைய டாங் வம்சத்தை இன்னும் மானசீகமாக ஆதரித்ததுக்கொண்டிருந்தவர்களையெல்லாம் வானத்துக்கு சென்று ஆதரியுங்கள் என்று அனுப்பிவிட்டாள். 

ஒரு அந்தப்புரத்தில் கடைநிலைப் பெண்ணாக நுழைந்த பதிமூன்று வயது சிறுமி சீனப் பேரரசியான கதை இதுதான். ஆனால் இது இடைவேளைதான். அவள் பேரரசியாக எப்படி ஆண்டாள், என்ன செய்தாள் என்பதெல்லாம் இதே போல தொடரும் கதை. அசோகரை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு இன்னும் பல பௌத்த கோவில்களைக் கட்டினாள், புதிய நகரங்களை உருவாக்கினாள், நாளந்தாவுக்கு நிகரான ஒரு பல்கலைக்கழகத்தை சீனாவில் அமைத்தாள், யுவான் சுவாங் போல இந்தியாவுக்கு பணிகளை அனுப்பினாள், பல இந்திய பௌத்த ஞானிகளைக் கூப்பிட்டு அரசவையில் வைத்துக் கொண்டாள், போதிதர்மரின் ‘ஜென்’ பௌத்தத்தை ஊக்குவித்தாள், சைவ உணவைப் பிரபலப்படுத்தினாள், மீன் பிடித்தலைத் தடை செய்தாள்… பௌத்தம் ஒரு நிலையான அதிகாரம் மிக்க மதமாக வேர்விட்டது. இன்னொரு புறத்தில் தன் காதலர்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டிருந்தாள், அரசியல் கொலைகளையும் கடைசிவரை செய்துகொண்டிருந்தாள். கடைசிகாலத்தில் தான் துரத்திவிட்ட ‘புத்தரின் ஒளியின் இளவரசனை’ அடுத்த பேரரசனாக நியமித்துவிட்டு எண்பத்து ஒன்றாவது வயதில் இயற்கை எய்தினாள். அவளது எண்பது ஆண்டு கால வாழ்வில் அன்றைய காலத்தின் எல்லா அதிகார கட்டமைப்புகளையும் தன்னை நோக்கி வளைய வைத்தாள், வளையாதவற்றை உடைத்துப் போட்டாள்.

இவளது ‘இன்னொரு பக்கம்’ எவ்வளவு தூரம் உண்மை என்று சொல்லமுடியாது. ஏனென்றால் அவளது மறைவுக்குப்பிறகு வரலாறு மாற்றப்பட்டு கன்பூசியவாதிகளால் அவளை ஒரு கொடுங்கோல் அரசியாக, தகாத உறவுகள் கொண்ட பெண்ணாகச் சித்தரித்து எழுதிவைத்ததுதான் பெரும்பாலும் கிடைத்திருக்கிறது. இருந்தாலும் அதில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. அவள் தன் கடைசிகாலத்தில் தான் செய்த பாவங்களையெல்லாம் ஒரு தங்கப்பலகையில் எழுதி அவற்றுக்கு மன்னிப்பு கோரி ஒரு மலையில் வைத்திருந்ததாக நம்பப்பட்டது. உண்மையிலே அந்த தங்கப்பலகை 1980-களில் கண்டெடுக்கப்பட்டது. பாவமன்னிப்பு கேட்டது உண்மைதான். இதோடு நானும் இந்த பேரரசியின் கதையை முடித்துவிடுகிறேன்.

(வில்லியம் டேல்ரிம்பிளின் ‘the golden road’ புத்தகத்தில் ‘the fifth concubine’ என்ற அத்தியாயத்திலும், அதன் பின்குறிப்புகளிலிருந்தும் நீங்கள் மேலும் வாசித்துக் கொள்ளலாம்.)

Comments
* The email will not be published on the website.